Thursday, 10 November 2016

தமிழ்த் திரையிசையின் பிதாமகர்கள் 6: திரு K V மகாதேவன்-

தமிழ்நாட்டின் தென்பகுதியில் நாகர்கோவில் என்ற ஊரில் கிருஷ்ணன்கோவில் என்ற சிற்றூரில் வெங்கடாசல பாகவதர், பிச்சையம்மாள் ஆகியோருக்கு மகாதேவன் பிறந்தார். இவரது பாட்டனார் ராம பாகவதர் திருவனந்தபுரம் அரசரின் ஆஸ்தான வித்துவானாக இருந்தவர். தந்தையார் வெங்கடாசல பாகவதர் கோட்டு வாத்தியம் இசைப்பதிலும் வல்லவர். சிறு வயதிலேயே இசையில் நாட்டம் கொண்டிருந்தமையினால் மகாதேவன் பள்ளிப் படிப்பைத் தொடரவில்லை. பாலகாந்தர்வ நாடக சபையில் இணைந்து பெண் வேடம் ஏற்றுப் பாடியவாறு நடித்தார்.

பூதப்பாண்டி அருணாசலக் கவிராயரிடம் முறையாக இசை பயின்றார். முறையாக இசை பயின்ற பின்னர் அங்கரை விசுவநாத பாகவதரின் இசைக் குழுவில் இணைந்து பம்பாய் ஐதராபாத், தில்லி, நாக்பூர் ஆகிய வெளியூர்களுக்குச் சென்று கச்சேரி செய்து வந்தார்.

1942 இல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்த மகாதேவன் பின்னர் பக்த கௌரி, அக்கினி புராண மகிமை, பக்த ஹனுமான், நல்ல காலம், மதன மோகினி ஆகிய படங்களுக்கு இசை அமைத்து தமிழ்த் திரையுலகில் தனக்கென்று ஒரு நிலையான இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். மதன மோகினி திரைப்படத்தில் பி. லீலாவுடன் இணைந்து பாடல் ஒன்றையும் பாடினார்.

இவருடைய படைப்புகளின் பிரதான அம்சங்கள்;  பாடல் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இசையமைப்பது; எப்போதும் கர்நாடக அடிப்படையில் இசையமைப்பது; பாடகர்களுக்கும் அவரது இசைக்கலைஞர்களுக்கும் மதிப்பளித்து அவர்களை சுதந்திரமாய் செயல் பட விடுவதன் மூலம் தனது படைப்புகளுக்கு மேலும் மெருகூட்டுவது போன்றவை.

இவரது சிறந்த தமிழ்ப் படங்களுள் சில: கந்தன் கருணை, திருவருட்செல்வர், திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், படிக்காத மேதை, வசந்த மாளிகை, வானம்பாடி, முதலாளி, அடிமைப் பெண், தாய் சொல்லைத் தட்டாதே போன்றவை.

இவரது சிறந்த பாடல்களுள் ஒன்றாக திருவருட்செல்வருள் வரும் மன்னவன் வந்தானடி என்ற பாடலை கூறலாம். இந்த பாடல் ஒன்றே திரு K V மகாதேவன் அவர்களின் திறமைக்கு சான்று. இவருடைய பாடல்களை பட்டியலிட்டு மாளாது. ரசிகர்கள் அவரவர் விருப்பம் போல் அவர்களுக்குப் பிடித்த பாடலை பற்றி கருத்து தெரிவிக்கலாம்.

தெலுங்கு மொழி துளியும் அறியாத இவர் சங்கராபரணம் படத்திற்கு இசையமைத்தது மிகப் பெரிய வியப்பு. அவற்றில் வரும் அனைத்துப் பாடல்களுமே  கர்னாடக இசையின் அடிப்படையிலேயே அமைந்தன. இப்படத்திற்காக இவர் ஜனாதிபதி விருதும் பெற்றார் என்பது ஒரு கூடுதல் சிறப்பு. இயக்குனர் திரு கே விஸ்வநாத் தனது பெரும்பாலான படங்களுக்கு இவரையே இசையமைக்க செய்தார்.

எம் எஸ் விஸ்வநாதன் இவரை தனது மானசீக குருவாகக் கொண்டிருந்தார். பல இசையமைப்பாளர்களுக்கும் இவர்  முன்னோடியாகத் திகழ்ந்தார். இவரது பாடல்கள் அனைத்துமே இறவாப் புகழ் பெற்றவை. இவர் மறைந்தாலும் இவரது பாடல்கள் என்றும் நம் நெஞ்சை விட்டு மறையா!

1 comment:

  1. KVM அவர்கள் நம் வாழ்வில் இசை வழியே கலந்தவர்களில் முக்கியமானவர்.மனோன்மணி படத்தில் NSK, மதுரம் இணைந்து பாடிய ஊம்முனு ஒரு வார்த்தை சொல்லம்மா என்ற பாட்டு முதல், என்னை கவர்ந்தவர். கண்ணோடு கண்ணாய் ரகசியம் பேசி என்று, P லீலாவுடன் சேர்ந்து பாடிய பாடல் இன்றும் நான் விரும்பும் ஒரு பாடல். அவருடைய பல பாடல்கள், சிரஞ்சீவியாய் என்றும் வாழ்கின்றன.

    ReplyDelete